அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சீன வைராலஜிஸ்ட்டான லி-மேங் யான், கொரோனா வைரஸ் தொற்று வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததால், தன்னை சீன அரசு பழிவாங்க முயல்வதாகப் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில், சீன வைராலஜிஸ்ட்டான லி-மேங் யான், கொரோனா வைரஸ், வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். பின்னர் சீன அரசின் ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர எண்ணிய அவர், அதற்காக அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். அவர் தப்பிச் செல்ல உதவியவர்கள் அப்போதைய டொனால்டு டிரம்ப் அணிக்கு மிகவும் நெருக்கமான அமைப்புகளாக இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பானன் மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு வியாபாரியான குவோ வெங்குயி ஆகியோர், யானின் விமானச் செலவு மட்டுமின்றி, அமெரிக்காவில் அவரது சந்திப்புகளையும் ஏற்பாடு செய்ததாகப் பல ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதன் முதலில் இவர்களது சமூக ஊடக தளங்கள் மூலமே லி-மேங் யானின் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் பணிபுரிந்தபோது, சீன அரசு உண்மையை மறைப்பதாகத் தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் லி-மேங் யான் தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து மற்ற மனிதருக்குப் பரவும் தன்மை கொண்டது என்பதை, சீன மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே தனது குடும்பத்தாரிடம் இருந்து யான் நிரந்தரமாக விலக நேரிட்ட நிலையில், அவர் தற்போது உலகத்திடம் இருந்து ஒதுங்கித் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தன்னை மீண்டும் சீனாவிற்கு அழைத்துச் சென்று பழிவாங்கச் சீன அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத் தனது கணவர், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரை அவர்கள் பயன்படுத்துவதாகவும் லி-மேங் யான் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பாதுகாப்பு கருதி குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் மேற்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள யான், தன்னை கண்காணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் யானின் கணவர் ரணவக பெரேரா, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும், அவரை ஒருமுறை சந்தித்து பேசி யான் பாதுகாப்பாக உள்ளார் என்பதை உறுதி செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை யானிடம் இருந்து தான் தெரிந்துகொள்ள நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த விவகாரம் இன்று வரை தெளிவான முடிவுக்கு வராத ஒரு சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
லி-மேங் யானின் குற்றச்சாட்டுகள், அவரது குடும்பத்தினரின் நிலைப்பாடு, சீன அரசின் பதில்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதால், உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருளில் மூழ்கியுள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள், யானின் தனிப்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக, ஒரு சிக்கலான சூழ்நிலையாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் இன்னும் விவாதப்பொருளாகவே தொடர்ந்து வருகிறது.
















