16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலியா, இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…
உலகளவில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றான ஆஸ்திரேலியா, அந்நாட்டில் உள்ள 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக வலைதள தடையை அமல்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் இது போன்ற தடையை நடைமுறைக்குக் கொண்டு வருவது இதுவே முதல் முறை. அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும், தங்கள் தளத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் வைத்துள்ள கணக்குகளை முடக்குவதுடன், புதிய கணக்குகளை அவர்கள் தொடங்காமல் கண்காணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 4 கோடியே 95 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள 28 லட்சம் இளம் பயனாளர்கள் TIK TOK, INSTAGRAM, YOUTUBE, REDDIT, TWITCH போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்
. அதே நேரத்தில் MESSAGING, ஆன்லைன் விளையாட்டு, கல்வி, மருத்துவ சேவைகள் போன்ற நோக்கத்துக்கான தளங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக WHATSAPP, PINTEREST, ROBLOX போன்ற சில செயலிகள் இதற்குள் உட்படுத்தப்படவில்லை. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக வலைதள தடை அமலுக்கு வந்துள்ள போதிலும், பயனர்களின் வயது சரிபார்ப்பு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இருப்பினும், முகத்தினை ஸ்கேன் செய்வது, வங்கி மற்றும் மொபைல் சேவை தகவல்களை வைத்து வயதை உறுதி செய்வது போன்ற முறைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், YOUTUBE நிறுவனம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தேவையான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு விதித்துள்ள தடை ஒருபுறமிருக்க மற்றொருபுறம், பல இளைய தலைமுறையினர் இந்தத் தடையை மீறுவதற்கான வழிகளை தேட தொடங்கிவிட்டதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக VPN செயலியைப் பயன்படுத்துவது, பதிவு செய்யும்போது வயதைப் பொய்யாகக் குறிப்பிடுவது, பெற்றோரின் செல்போன் எண்ணைப் பயன்படுத்துவது போன்ற பல சூழ்ச்சியான வழிமுறைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் மேலாக, தனது தாயின் முகத்தை கேமரா முன் காட்டி வயதை சரிபார்த்து SNAP CHAT-ல் மீண்டும் நுழைந்ததாகக் கூறிய 13 வயது சிறுமியின் வீடியோ பல்வேறு தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், அந்தச் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுப் பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஆஸ்திரேலிய அரசை அலர்ட் செய்து வருகின்றன. இளைய தலைமுறையினரின் இந்தச் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு பல பெற்றோரும், “அரசின் இந்தத் தடையால் எதுவும் மாறாது, பிள்ளைகள் பல்வேறு வழிகளை இதற்காகக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்” எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேபோல, ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராகக் கருத்து பகிர்ந்துள்ள REDDIT உள்ளிட்ட சில நிறுவனங்கள், “அரசின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என விமர்சித்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸோ, “இளம் வயதினர் சமூக வலைதளங்களுக்குள் மூழ்கி கிடப்பதில் இருந்து விடுபட இது உதவும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பிற நாடுகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன், ஃபிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகள் வயது வரம்பு மற்றும் பெற்றோர் அனுமதி தொடர்பான விதிகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ள நிலையில், மலேசியா போன்ற சில நாடுகள் அடுத்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ள இதே சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு உண்மையில் அதற்கான பலனை தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
















