கடல் நீரில் இருந்து நேரடியாக குடிநீரையும், பசுமை ஹைட்ரஜனையும், குறைந்த செலவில் தயாரிக்கும் உலகின் முதல் தொழிற்சாலையை சீனா செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இது வருங்காலத்தில் எரிசக்தி துறையில் ஒரு புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பு.
கடல்நீரிலிருந்து நேரடியாக குடிநீரையும், பசுமை ஹைட்ரஜனையும் தயாரிக்க முயன்ற முதல் காலகட்டங்களில், அதற்கு முக்கிய தடைகளாக இருந்தது அதில் இருக்கும் அதிகளவு உப்பும், கனிமங்களும்தான். குறிப்பாகக் கடல் நீரிலிருக்கும் உப்பு Electrolysis கருவிகளை வேகமாகத் துருப்பிடிக்கச் செய்து, உற்பத்திச் செலவை பல மடங்கு உயர்த்தியது. அத்துடன் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கு தேவையான தூய்மையான நீர் கிடைக்காததால், முதலில் அதிகளவு கடல்நீரை நீண்ட நேரம் கொதியூட்டி சுத்திகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதற்குத் தேவையான மின்சாரம், குளிர்வூட்டல் மற்றும் பராமரிப்பு செலவுகள் மிக அதிகமாக இருந்ததால், தொழில்துறை அளவில் கடல்நீரை பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதே உலக ஆராய்ச்சியாளர்களின் பொதுவான பார்வையாக இருந்து வந்தது. அதிக தொழில்நுட்பச் செலவும், உயர் மின்சார தேவையும் இருந்தபோதிலும், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா போன்ற வல்லரசு நாடுகள் கடந்த சில ஆண்டுகளாகக் கடல்நீரை கொதிக்கவிட்டு குடிநீர் உருவாக்கவும், அதிலிருந்து பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கவும் பெரும் முதலீடுகளைச் செய்தன.
குறிப்பாக வறட்சியுடன் போராடும் மத்திய கிழக்கு நாடுகள், குடிநீர் தேவைக்காக பெரிய அளவிலான உப்பு நீர் கொதியூட்டும் ஆலைகளை கட்டத் தொடங்கின. அதே நேரத்தில், பசுமை எரிபொருள் தேவையை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், கடல்நீரை சுத்திகரித்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்தன. ஆனால் நீரை மிக தூய்மைப்படுத்தும் கட்டத்திலேயே செலவுகள் மிக உயர்ந்ததால், தொழில்துறை அளவில் இதை நடைமுறைப்படுத்துவது அந்த நாடுகளுக்கும் மிக கடினமாக இருந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், கடல் நீரைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் குடிநீரையும், பசுமையான ஹைட்ரஜனையும், குறைந்த செலவில் தயாரிக்கும் ஒரு புதிய தொழிற்சாலையை சீனா தொடங்கியுள்ளது. ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள ரிஜாவோ நகரில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கடல் நீரே முக்கிய மூலப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அதனை கொதியூட்ட அருகிலுள்ள தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவு வெப்பம் பயன்படுகிறது. இந்த தொழிற்சாலை சுமார் 3 வாரங்களாக தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரத்தியேக முறை மூலம் 800 டன் கடல் நீரை பயன்படுத்தி, ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான எரிவாயு பேருந்துகளை இயக்கும் அளவுக்கு பசுமை ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் இந்த முறையை பயன்படுத்தி சுத்தமான குடிநீர் மட்டுமின்றி, தொழில்துறைக்கு தேவையான உப்பு நீரையும் உருவாக்க முடியும் என விவரிக்கின்றனர் அந்நாட்டு விஞ்ஞானிகள்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பயன்பாடுகளுக்கு தேவையானவற்றை உருவாக்க இந்த தொழிற்சாலை பயன்படுகிறது. கடல் நீரில் இருக்கும் உப்பு, உற்பத்தி உபகரணங்களை சேதப்படுத்தியதால், கடல் நீரில் இருந்து பசுமை ஹைட்ரஜனை தயாரிக்கும் திட்டங்கள் இதுவரை சாத்தியப்படாமல் இருந்தது.
ஆனால், இந்த தொழிற்சாலையில் துருப்பிடிக்காத சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பும் சாத்தியமாகியுள்ளது. உலகின் கவனத்தை இந்த தொழிற்சாலை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், இந்த தொழிற்சாலையின் உற்பத்தி செலவும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கன மீட்டர் குடிநீரை தயாரிப்பதற்கு வெறும் 2 யுவான் மட்டுமே செலவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளதே அதற்கு முக்கிய காரணம்.
இந்திய மதிப்பில் கூறவேண்டுமானால் அதன் செலவு வெறும் 24 ரூபாய் மட்டுமே. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீகரம் போன்ற நாடுகளில், இதே அளவு குடிநீரை தயாரிக்க 42 ரூபாய் வரை செலவாகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய உப்புநீர் கொதியூட்டும் ஆலையில் இதற்கு 180 ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் பிற நாடுகளை ஒப்பிடும்போது, கடல் நீரை மிகக் குறைந்த செலவில் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தில் சீனா ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த புதிய தொழிற்நுட்பம் உலகளாவிய எரிசக்தி துறையிலும் ஒரு புதிய பாதையை திறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் கடற்கரை நகரங்களுக்கு குடிநீர் பாதுகாப்பு, பசுமை எரிபொருள் உற்பத்தி, தொழில்துறை கழிவு வெப்பத்தை மீண்டும் பயன்படுத்துதல் போன்ற பல முக்கிய துறைகளில், இந்த முறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















