பாகிஸ்தானில் மாகாணங்களை பிரித்து சிறிய நிர்வாக பிரிவுகளாக உருவாக்கும் திட்டம் குறித்த பேச்சுக்கள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன. இது குறித்து பாகிஸ்தான் அரசின் நிலைபாடு என்ன? புவிசார் அரசியல் நிபுணர்கள் இந்த திட்டம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி தோகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
“பாகிஸ்தான் பிரிவு” என்றாலே 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசமாக மாறிய கதைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால், இந்த பிரிவு அதுவல்ல. பாகிஸ்தானிலுள்ள நான்கு பெரிய மாகாணங்களை, பல சிறிய மாகாணங்களாக பிரிப்பது பற்றிய சிந்தனைகளே இவை.
பாகிஸ்தானில் மாகாணங்களைப் பிரிப்பது குறித்த விவாதங்கள், 1970களிலிருந்தே அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, பண்பாடு மற்றும் மொழி வேறுபாடுகள், வளங்களின் பகிர்வு மற்றும் நிர்வாக சிக்கல்கள் ஆகியவை புதிய மாகாணங்கள் தேவைப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பின. குறிப்பாக பஞ்சாப் மாநிலம் மிகப் பெரியதாக உள்ளதால் அதைச் சிறு மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும் என்பது பல அரசியல் குழுக்களின் நிலைபாடாக இருந்தது.
அதேபோல, தெற்கு பஞ்சாப், ஹசாரா, மொஹாஜிர் பகுதிகளை தனி மாகாணங்களாக அமைக்க வேண்டும் என்ற முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மத்தியில் அதிகாரம் குறைந்து விடுமோ என்ற அச்சம், இட ஒதுக்கீடு மற்றும் அடையாள அரசியல் மோதல்கள், தேசிய ஒருமைப்பாட்டுக்கான கவலைகள் போன்ற காரணங்களால் அவை நிறைவேறாமல் போனது. இருப்பினும் சமீப காலமாக கூட்டாட்சி அமைப்பை பலப்படுத்தவும், பிராந்திய வளர்ச்சி சமநிலையை மேம்படுத்தவும் மாகாண மறுசீரமைப்பு அவசியம் என்ற விவாதம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கூட்டாட்சி தொடர்பு அமைச்சராக உள்ள அப்துல் அலீம் கான், சிறிய மாகாணங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளது என பேசியுள்ளது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், மாகாணங்கள் மறுசீரமைக்கப்படுவதால் ஆட்சி மற்றும் சேவை வழங்கல் மேம்படும் என கருத்து தெரிவித்தார். அண்டை நாடுகளில் பல சிறிய மாகாணங்கள் உள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் அப்துல் அலீம் கான், பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் மற்றும் கெய்பர் பக்துன்க்வா ஆகிய ஒவ்வொரு மாகாணத்திலும், மூன்று புதிய மாகாணங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், அந்நாட்டிலுள்ள Pakistan People’s Party, சிந்து மாகாணத்தை பிரிக்க கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதற்கு இதுபோன்ற எதிர்ப்புகளே காரணமாக கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க உண்மையான பிரச்னை மாகாணங்களின் எண்ணிக்கையில் இல்லை என முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பலவீனமான நிர்வாகம், சட்டம் அமல்படுத்தல் குறைபாடுகள் மற்றும் உள்ளூர் ஆட்சிக்கு அதிகாரம் வழங்காதது உள்ளிட்டவையே இதற்கு காரணம் எனக்கூறும் அவர்கள், புதிய மாகாணங்களை உருவாக்குவது மக்கள் மத்தியில் மேலும் மனக்கசப்பை அதிகமாக்கும் என எச்சரித்துள்ளனர். அதேபோல, கடந்த காலத்தில் ஆட்சி நிர்வாகத்திலுள்ள பிரச்னைகளை சரி செய்யாமல், நிர்வாக மறுசீரமைப்புகளை மேற்கொண்டது, அரசியல் கலகங்களுக்கும், அதீத செலவுகளுக்கும் வழிவகுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் உள்ளூர் ஆட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கி, தற்போதுள்ள நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துவதே முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைவிடுத்து அடிப்படை குறைபாடுகளை சரி செய்யாமல் புதிய மாகாணங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்தால் அதனால் நன்மையை விட தீமையே அதிகம் நேரிடும் என்றும் அவர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.
















