கர்நாடக அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் மருந்தகங்கள் செயல்பட தடை விதித்த மாநில அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசு மருந்தகங்கள் செயல்படுவதற்கு நிறுத்தக் கர்நாடக அரசு உத்தரவிட்டது.
நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இலவசமாகவும், உறுதியுடனும் வழங்குவதை உறுதி செய்யவும், செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னதாக மத்திய அரசின் மருந்தகங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தது.
ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை என்பதை அறிந்த நீதிமன்றம், தற்போது மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து, ஜன் ஒளஷாதி மையங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இது நோயாளிகளுக்கான வெற்றி என்று பாராட்டினார்.
மேலும், காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு, அரசியல் பழிவாங்கல் பொதுமக்கள் நலனுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்கான பாடமாக அமைய வேண்டும் என்றும் தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
















