வேளாங்கண்ணி அருகே மதம் மாறி திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த ராகுல் டேனியல் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ராகுல் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள தேவாலயத்தில் ராகுல் வீட்டின் சம்மத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் ராகுலின் குடும்பத்தினர் தங்கியிருந்த நிலையில், அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு, பெண் வீட்டார் கீர்த்தனாவை தூக்கி சென்றனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெங்களூரு தப்பிச்செல்ல முயன்ற பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
















