மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழில்நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் புதிய சட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் பழைய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக புதியதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி ஆகிய சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் புதிய சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களுக்குத் தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் நோக்கங்களை முழுமையாக அறியாமல் வழக்கம் போல சில எதிர்க்கட்சிகள் இச்சட்டங்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்குமே தவிர, எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தொழிலாளர்களின் சட்ட வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்களை வழங்க வேண்டும், நிரந்தர தொழிலாளர்களை போல ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் விடுமுறை, நாற்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை, வருங்கால வைப்புநிதி, காப்பீடு என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு புதிய சட்டங்களில் சலுகைகள் நிரம்பியுள்ளன.
மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்குக் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோரின் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்தச் சட்டங்கள் ஒவ்வொன்றும் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
















