ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகி இருக்கும் துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமல்ல, காந்தகார் விமான கடத்தல் சம்பவத்திலும், 2001-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதலிலும் பாகிஸ்தானின் பின்னணியை தோலுரித்து காட்டியிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஆதித்ய தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் ஒரு வாரத்தில் 200 கோடி வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியான வரவேற்பை பெற்று வருகிறது. உரி படத்தை இயக்கிய ஆதித்ய தர், துரந்தர் படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே இயக்குவார் என பூஜை போட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.
படம் திரைக்கு வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லர் காட்சிகள் இதை உறுதிப்படுத்தவே, FDFS பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். 1999-ம் ஆண்டில் காந்தகார் விமானக் கடத்தல் மற்றும் 2001-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலை வேரறுக்க இந்திய உளவுத்துறைத்தலைவர் அஜய் சன்யால் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையே, துரந்தர் படத்தின் கதைச்சுருக்கம்.
சிறைவாசம் அனுபவிக்கும் பஞ்சாப்பை சேர்ந்த இளைஞனுக்கு இந்திய உளவுத்துறை உரிய பயிற்சிகள் வழங்கி, எவ்வாறு பாகிஸ்தானுக்குள் அனுப்பியது என்ற உண்மை கதை சினிமா பாணியில் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறை தலைவர் அஜய் சன்யால் வேடத்தில் நடிகர் மாதவனும், பஞ்சாப்பை சேர்ந்த இளைஞனாக ரன்வீர் சிங்கும் பின்னிப் பெடல் எடுத்துள்ளனர். மிடுக்கான தோற்றத்தில் நடிகர் சஞ்சய் தத்தும் தன் பங்கிற்கு அதிரடி காட்டியிருக்கிறார். படம் பார்க்கும் எவரையும் சீட் நுனிக்கு நகர்த்தும் திரைக்கதை இருப்பதால், துரந்தர் திரைப்படம் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது. வேலை நாட்களில் மார்னிங் மற்றும் மேட்னி ஷோக்களில் கூட்டம் சற்று குறைந்தாலும், ஈவினிங் மற்றும் நைட் ஷோவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உரி திரைப்படத்தின் ஒட்டுமொத்தமான கலக்ஷனை இந்த வாரத்திலேயே துரந்தர் படம் முறியடிக்கும் எனத் திரை விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இந்தியாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த துரந்தர் திரைப்படத்தை, வளைகுடா நாடுகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் உள்ளிட்ட நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ள நிலையில், இந்தத் தடை உத்தரவு படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால், என்ன பண்ணுவது, உண்மை சம்பவத்தை மறைத்து விட்டா படம் எடுக்க முடியும் எனத் துணிந்துள்ள படக்குழு, எந்த இழப்பாக இருந்தாலும் சரி என்ற முடிவுக்கு வந்திருப்பதாகப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















