காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன்? என டாஸ்மாக் நிர்வாகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமை காரணமாகக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்குக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது எனவும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதைக்கட்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்த, டாஸ்மாக் நிர்வாகம் முன்வராதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.
ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















