வைகை அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் 6 மாவட்ட ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனியில் உள்ள வைகை அணையில் 63.94 அடி நீர்மட்டம் உள்ள நிலையில், கிருதுமால் நதி பாசனம், பெரியார் கால்வாய் பாசனம் மற்றும் பிரதான மதகுகள் வழியாகக் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதன்படி திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 111 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் எனப் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















