பெங்களூருவில் காரில் வந்த இருவர் அதிலிருந்த 3 குப்பை மூட்டைகளை, சாலையோரம் வீசிச்சென்ற சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சர்வஜ் நகர் பகுதிக்குக் காரில் வந்த இருவர் அதன் பின்பகுதியில் வைத்து எடுத்து வரப்பட்ட 3 பெரிய குப்பை மூட்டைகளை சாலையோரம் வீசிச் சென்றனர்.
இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்துச் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். வீடியோ வைரலான நிலையில், அது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏராளமான மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி ஆணையர் பொம்மலா சுனீல் குமார் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் உதவியுடன், குப்பை மூட்டைகளை வீசிச் சென்றவர்களின் காரை அடையாளம் கண்டுபிடித்து அதன் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அபராத தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை தடுக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















