அசாம் மாநிலத்தில் முதல்முறையாக வங்கதேசத்தை சேர்ந்த நாற்பது வயது பெண்ணுக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு, அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடையும் மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்காக மத்திய அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியது.
இந்நிலையில், அசாமின் சில்லார் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவர், இந்தியக் குடியுரிமை கோரி கடந்தாண்டு விண்ணப்பித்திருந்தார்.
வங்கதேசத்தை சேர்ந்த அவர், சிகிச்சைக்காகக் கடந்த 2007ல் இந்தியாவுக்கு வந்த நிலையில், இந்தியர் ஒருவரை திருமணம் செய்து இங்கேயே தங்கிவிட்டார். கடந்தாண்டு லோக்சபா தேர்தல் தொகுதி மறுவரையறை காரணமாக, இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
எனவே, குடியுரிமை கோரி அவர் மீண்டும் விண்ணப்பித்த நிலையில், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில், சிஏஏ சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
இதேபோல், அசாமின் கச்சாரில் வசிக்கும் வங்கதேசத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவருக்கும் இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியக் குடியுரிமை கோரி அசாமைச் சேர்ந்த 40 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















