பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியா மீது தாக்குதல்களை நடத்த வங்கதேசத்தில் ரகசிய பயங்கரவாத தளம் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு, அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி வருகின்றன.
பாகிஸ்தானின் ஆதரவுடன் ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தடுத்ததால், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்கம் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தனர்.
அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வங்கதேசம் வாயிலாக நுழைந்து, இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டாக்காவில் உள்ள மதரசா பள்ளி பயங்கரவாதம் தொடர்பான பரப்புரைகள் நடத்தி வந்ததாகவும், டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது வங்கதேசத்தில் உள்ள மதரசா பள்ளி மூடப்பட்டது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்தியாவுக்குள் நேரடியாக நுழைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பாதை வாயிலாகப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
















