உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது என்பது புதிய நடைமுறை அல்ல என்று குறிப்பிட்ட ஐக்கிய இந்து முன்னணி, எதிர்க்கட்சிகளுக்கு வரலாறு புரியவில்லையா? அல்லது இந்து மரபுகளை பலவீனப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் நோக்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு தவறானது என நம்பினால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என வலியுறுத்திய ஐக்கிய இந்து முன்னணி, எதிர்க்கட்சிகளின் நோக்கம் அதுவல்ல என்றும், மாறாக நீதிபதிக்கு எதிராகப் பதவிநீக்க தீர்மானத்தை கொண்டு வந்து அழுத்தத்தை உருவாக்க விரும்புவதாகவும் ஐக்கிய இந்து முன்னணி விமர்சித்துள்ளது.
















