தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்னை காரணமாகப் போர் நடந்து வரும் நிலையில் அதில் வெற்றி பெற வேண்டிக் கம்போடியர்கள் மாந்திரீக பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் எல்லைப் பகுதியான சுரீன் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசாத் தா மோன் தோம் கோயிலை அண்டை நாடான கம்போடியா சொந்தம் கொண்டாடி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட போரில் 45 பேர் பலியாகினர்.
இதன்பின், கடந்த அக்டோபர் மாத இறுதியில் கோலாலம்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்து ராணுவம் சண்டையின் போது தனது வீரர்கள் 15 பேர் இறந்ததாக ஒப்புக்கொண்டது.
மேலும் இந்த வாரத் தொடக்கத்தில் கம்போடிய வீரர்களில் 165 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போரில் கம்போடியா வெற்றிப் பெற வேண்டிக் கம்போடிய பழங்குடியினர் மாந்திரீக பூஜைகள் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.
















