நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளைப் புகைப்படம் எடுக்கும் தொழிலை நடத்த டெண்டர் விடப்பட்டதால், பலரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உதகை படகு இல்லத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு ஏராளமானோர் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுத்துக் கொடுத்துக் கட்டணம் வசூலித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இதற்காகப் புகைப்பட கலைஞர்கள் மாதம் தோறும் தமிழக அரசுக்கு 4,593 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தனர். சமீபத்தில் படகு இல்லம் பகுதியில் புகைப்படம் எடுக்க அரசு டெண்டரை அறிவித்த நிலையில், அதனை ஏற்காட்டை சேர்ந்த ஒருவர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பல ஆண்டுகளாக அங்குப் புகைப்படம் எடுத்துப் பிழைப்பு நடத்தி வந்த புகைப்பட கலைஞர்களை படகு இல்லம் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் படகு இல்லத்தை நம்பி பிழைப்பு நடத்தி வந்த புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகையால் படகு இல்லத்தில் புகைப்படம் எடுக்க டெண்டர் விடும் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனப் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















