காங்கிரஸ் பேரணியின்போது பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட பேரணியில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து முழக்கம் எழுப்பப்பட்டது.
இது பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குக் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் முழக்கம் எழுப்பினர். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் பேரணியின்போது பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கங்கள், காங்கிரஸின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுவதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக நாட்டு மக்களிடம் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அரசியல் ரீதியான எதிரிகளை கொல்ல நினைப்பது என்ன மாதிரியான மனநிலை என ஆதங்கம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டால் தான் காங்கிரஸ் கட்சி தனது தவறை உணர்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.
















