சீனாவில் பிரபல நடிகை போலப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதால், பெண் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாறிப்போயுள்ளது. பல்வேறு சிக்கல்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். அவர் யார்? என்ன நடந்தது? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஃபேன் பிங்பிங் (Fan Bingbing) என்பவர் சீனாவை சேர்ந்த மிகப் பிரபலமான நடிகை. ‘My Fair Princess’ போன்ற தொடர்கள் மூலமும், செல்போன்(2003) போன்ற திரைப்படங்கள் மூலமும் இவர் புகழ்பெற்றார். இதனால், ஃபேன் பிங்பிங்கிற்கு உலகளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களில் ஹீ செங்ஸி(He Chengxi) என்பவர் குறிப்பிடத்தக்கவர்.
சீனாவில் ஃபேன் பிங்பிங் எந்தளவு பிரபலமானவரோ, அதே அளவு ஹீ செங்ஸியும் பிரபலமானார். அதற்குக் காரணம், அவரது உருவ அமைப்பு. அடிப்படையில் மிகவும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவரான ஹீ செங்ஸி, ஃபேன் பிங்பிங்கின் அழகால் கவரப்பட்டு, அவரை போலவே தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார்.
இதற்காக அவர் 37 அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தனது முகத்தையும், உடலமைப்பையும் மாற்றிக்கொண்டார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாயை அவர் செலவிட்டார். அவர் மேற்கொண்ட இந்தப் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து சீன தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் செய்தி வெளியிடத் தொடங்கின.
இதனால், நாடு முழுவதும் அவர் பிரபலமானார். லிட்டில் ஃபேன் பிங்பிங் என்ற அடைமொழியையும் அவர் பெற்றார். அத்துடன் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்புகளும் தேடி வந்தன. இதனிடையே, தனக்கு அறுவை சிகிச்சை செய்த யூ சியாவோகுவான் என்ற மருத்துவருடன் அவருக்குக் காதல் மலர்ந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஹீ செங்ஸியை கவர்வதற்காக, ஃபேன் பிங்பிங்கின் காதலன் போல அந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இந்த வித்தியாசமான ஜோடி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி மேலும் பிரபலமடைந்தனர். அத்துடன், மற்றவர்களுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வைக்கும் வகையில், புதிய மருத்துவமனை ஒன்றையும் அவர்கள் தொடங்கினர். அந்த மருத்துவமனைக்கும் ஆதரவு பெருகியது. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. இந்தச் சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ஹீ செங்ஸி கண்டுபிடித்தார்.
இதனால், அவரது இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த அதிர்ச்சி போதாதென்று, யாரை போல அவர் தனது உருவத்தை மாற்றிக்கொண்டாரோ, அந்த நடிகை வரிஏய்ப்பு புகாரில் சிக்கிக்கொண்டார். அதுவும் ஆயிரம் கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்திருந்தால், நாடு முழுவதும் அவருக்குக் கெட்ட பெயர் உண்டானது. அத்துடன், திரைப்படங்களில் நடிக்கவும் சீன அரசு தடைவிதித்தது. இவை அனைத்தும் ஹீ செங்ஸியையும் பாதிக்கத் தொடங்கின.
குறிப்பாக, இணையவாசிகளும், அண்டை வீட்டாரும் அவரை கேலிப்பொருளாகப் பார்க்கத் தொடங்கினர். அவரது நடிப்பு வாய்ப்பு, பிரபலம், புகழ் என அனைத்தும் ஒரே இரவில் காணாமல் போனது. இதனால், மிகவும் மனமுடைந்து போன அவர், மீண்டும் தனது பழைய உருவத்தை பெற முடிவெடுத்தார்.
அதற்காக மீண்டும் பல பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துகொண்டார். தற்போது அவர் ஃபேஷன் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டும், அது சார்ந்த கட்டுரைகளை எழுதியும் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார். மீண்டும் துணை நடிகையாக நடிக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஹீ செங்ஸியின் இந்தக் கதை தற்போது இணையத்தில் மீண்டும் கவனம் பெற தொடங்கியுள்ளது. நடிகர், நடிகைகள் மீதான மோகம் காரணமாகத் தங்களது சுயத்தை இழந்து வருபவர்களுக்கு, ஹீ செங்ஸியின் வாழ்க்கை, ஒரு பாடமாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















