மார்கழி மாத பிறப்பையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பஜனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
மார்கழி மாத பிறப்பு என்பது தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான, இறைவன் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வீதிகளில் பஜனை பாடியபடி வலம் வருவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மார்கழி பஜனை நிகழ்ச்சிகள் விமரிசையாகத் தொடங்கின. கபாலீஸ்வரர் கோயில் வீதிகளில் திருப்பாவை, திருவம்பாவை, தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடியபடி சிறுவர், சிறுமிகள் ஊர்வலமாகச் சென்றனர்.
இதேபோன்று, கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் உள்ள சைவ மற்றும் வைணவ கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் பலர் குழுக்களாக இணைந்து பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்களை பாடி தெருக்களில் வலம் வந்தனர். மேலும், பெண்கள் தங்களது இல்லங்களின் வாசல்களில் கோலமிட்டு மார்கழி மாத முதல் நாளை வரவேற்றனர்.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், புத்தேரி பகுதியில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சிகள் விமர்சையாகத் தொடங்கின.
புத்தேரி பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பஜனை பாடல்களை பாடியபடி வீதிகளில் உலா வந்து இறுதியில் கோயிலை வந்தடைந்தனர்.
அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் சிறார்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். சிறு வயதில் திருவம்பாவை பாடுவது பக்தியை வளர்க்கும் என்றும், படிப்பில் ஆர்வம் ஏற்படும் எனவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
















