திருத்தணி அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து அனைத்துக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மோகித் என்ற சிறுவன் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
மதியம் உணவு இடைவேளையில் பள்ளி வளாகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழமையான பள்ளி சுவரைப் பராமரிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகத்தினருடன் மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க கோரி அரசு மருத்துவமனையின் முன்பு அனைத்துக்கட்சியினர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமான உறுதி அளித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
















