மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் 3வது தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவாக இருந்த அலையாத்திக் காடுகள் தற்போது 9 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது எனவும் கூறினார்.
மேலும், மாநகரப் போக்குவரத்து கழகங்களின் மூலமாக ஏற்கனவே 120 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், கூடுதலாக 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
















