2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கிருஷ்ணகிரி அருகே பாறை ஓவியம் கண்டறியப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதைப் பற்றி இந்தச் செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிமரத்துக்குழி கிராமம் அருகே பூமலை உச்சியில் நாமஜுனையில் இந்தப் பாறை ஓவியம் புலப்பட்டுள்ளது. பொதுவாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மனித, விலங்கு உருவங்களைக் கொண்ட பாறை ஓவியங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்ட பாறை ஓவியங்கள், பெரியகோட்டப்பள்ளி, மலையாண்டஹள்ளியை அடுத்த ஆண்டிமலை ஆகிய இரண்டு இடங்களிலும் இதுவரைக் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது புதிதாய் தென்பட்டுள்ள பூமலை நாமஜுனைப் பாறை ஓவியம் இவ்வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளது. மோரனஅள்ளியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கண்ணன் என்பவரின் கண்களில் இந்த ஓவியம் தென்படவே, அதனைப் பாறை ஓவிய ஆய்வாளர்ச் சதானந்த கிருஷ்ணகுமாரின் கவனத்திற்குச் சென்றது.
பின்னர் அருங்காட்சியகப் பாதுகாப்பாட்சியர் சிவக்குமார், பிரகாஷ், அருங்காட்சியக முன்னாள் பாதுகாப்பாட்சியர்க் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த ஓவியத்தின் தன்மையை ஆய்வு செய்தனர்.
நாகஜுனைப் பாறை ஓவியத்தில், 350-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், மனித விலங்கு ஓவியங்களும் உள்ளன… 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட இயற்கையான குகையின் விதானத்தில், வெண்சாந்தினால் வரையப்பட்டுள்ளன. அதன் கீழே வற்றா சுணை உள்ளது. ஓவியத் தொகுப்பின் மையத்தில், நெற்றிப் பகுதியில் திரிசூல வடிவிலான பெண் தெய்வமும், இருப்பக்கமும் வீரர்கள் தெய்வத்தை நோக்கி இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது.. இது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாதீடு என்பதில் காட்சி எனக் குறிப்பிடப்படுகிறது..
பாதீடு என்பது வீரர்கள் வேட்டையின்போது கிடைத்த விலங்குகளை ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த பெண், குழுவினர் அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும் நிகழ்வாகும். தெய்வத்தன்மை வாய்ந்த இப்பெண்ணைக் கொடிச்சி என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இப்பாறை ஓவியத் தொகுப்பில் சதுரத்திற்குள் மனிதன், வட்டத்திற்குள் மனிதன் போன்றவை இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்திட்டைகள் மற்றும் கல் வட்டங்களைக் குறிக்கின்றன. தேர் போன்ற அமைப்பினுள் ஒரு மனிதனைக் காட்டியிருப்பது தேர்ப் பாடையைக் குறிக்கிறது. அது இறந்த வீரன் சொர்க்கத்துச் செல்வத்தின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது.
ஓவியத்தில் காணப்படும் குறியீடுகள் போன்று அகழாய்வில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன. இத்தகைய குறியீடுகளில் இருந்தே தமிழி எழுத்துகள் தோன்றியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வுகளுக்குப் பாறை ஓவியக் குறியீடுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.
















