ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றாக ஜனவரி 1ஆம் தேதி முதல் பாரத் டாக்சி எனும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆட்டோ, கார், பைக் வாயிலான பொது போக்குவரத்து சேவையை ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. லட்சக்கணக்கானோர் இந்த செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் பாரத் டாக்சி என்ற செயலி ஜனவரி 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சஹாகர் டாக்சி என்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படவுள்ள பாரத் டாக்ஸி சேவை, முழுக்க முழுக்க பூஜிய கமிஷன் மாடல் அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் டாக்ஸி செயலிகள் போல கமிஷன் பிடித்தம் இன்றி, ஓட்டுநர்களுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் டெல்லியிலும், பிப்ரவரியில் குஜராத்திலும் அறிமுகப்படுத்தப்படும் பாரத் டாக்சி சேவையை, மேலும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















