ஆண்டாள் கோலத்தில் தன்னை அலங்கரித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் குறித்து அவதூறாக பேசி, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு விளம்பரம் தேடி கொள்கிறார் என விமர்சித்துள்ளார்.
ஆண்டாள் தாயாரை திமுக கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்தி பேசியபோது தமிழச்சி தங்கப்பாண்டியன் எங்கே போனார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து சமய தெய்வங்களை கம்யூனிஸ்ட்டுகள், திமுக பேச்சாளர்கள் கேலி கிண்டல் செய்தபோது அமைதி காத்த தமிழச்சி தங்கப்பாண்டியன் , தற்போது யாரை ஏமாற்ற ஆண்டாள் வேஷம் தரித்துள்ளார் என வினவியுள்ளார்.
விரைவில் இஸ்லாமிய பெண்மணி வேடம் அணிந்தும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கோலத்திலும் புகைப்படம் வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சனாதன போர்வையில் இந்து தர்மத்தை அழிக்க முயலும் தமிழச்சி தங்கப்பாண்டியனின் இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிக்க மாட்டார்கள் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
















