முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1971ம் ஆண்டுப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான ஆவணங்களை அவரது நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்துக்கு வழங்கினார்.
மொத்தம் 51 பெட்டிகளில் நேரு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அருங்காட்சியகத்தில் இருந்து நேரு தொடர்புடைய குறிப்பிட்ட ஆவணங்கள் ஏதும் மாயமானதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவும் மாயமானதாகக் கண்டறியப்படவில்லை என பதிலளித்தார்.
மேலும், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2008 முதல் நேருவின் ஆவணங்கள் சோனியா காந்தியிடம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
















