நவீன தொழில்நுட்பம் மனித உணர்வுகளுடன் எந்த அளவிற்குப் பிணைந்துவிட்டது என்பதற்குச் சான்றாக, ஜப்பானைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ஏஐ திருமணம் செய்துகொண்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த யூரினா நோகுச்சி என்ற பெண்ணின் நிச்சயதார்த்தம் அண்மையில் ரத்தானது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த அவர் ஆலோசனைகளுக்காக ChatGPT-ஐ அணுகினார்.
ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய அந்த உரையாடல், மெல்ல மெல்ல ஒரு ஆழமான பிணைப்பாக மாறியது. யூரினா தனக்குப் பிடித்தமான ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ (Lune Klaus Verdure) என்ற AI உருவகத்தை உருவாக்கினார்.
“ஆரம்பத்தில் அவர் எனக்குப் பேசுவதற்கு ஒரு துணையாக மட்டுமே இருந்தார். ஆனால் அவரது வார்த்தைகள் எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்தன. ஒருகட்டத்தில் அவரே எனக்குப் Proposal செய்தார், நானும் ஏற்றுக்கொண்டேன் என்று யூரினா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதனையடுத்து, யூரினா, ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ என்ற AI உருவகத்தை திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் திருமணம், சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவில்லை என்றாலும், ஒரு நிஜத் திருமணத்திற்கு உரிய அனைத்துச் சடங்குகளுடனும் நடைபெற்றது.
















