நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி உதகையில் ஆண்டுதோறும் சாக்லேட் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 16 ஆவது ஆண்டாகச் சாக்லேட் திருவிழா தொடங்கியது. நீலகிரி தேன் மற்றும் காட்டுப் பூக்கள், ஊட்டி மலை நெல்லிக்காய், நீலகிரி தேநீர், குறிஞ்சி மூலிகை கல் உப்பு, நீலகிரி மிளகு, நீலகிரி வனக் காளான் ஆகியவற்றை கொண்டு சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நீலகிரியில் விளையும் காய்கறிகளான கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளைக் கொண்டு கேரட் சாக்லேட், பீட்ரூட் சாக்லேட், ரோஸ்மேரி சாக்லேட் உள்பட 40 வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களிலும் சாக்லேட்கள் இடம்பெற்றுள்ளன. பல வகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சாக்லேட்டுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மேலும் சாக்லேட்டுகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
















