சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சேவையாற்றிய பெண்களுக்குக் கல்வியாளர் சுதா சேஷய்யன் பாரதி கண்ட புதுமைப்பெண் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மஹாலில் நவரச பாரதி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்வியாளர் சுதா சேஷையன், பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சேவையாற்றிய பெண்களுக்கு டாக்டர் சுதா சேஷய்யன் பாரதி கண்ட புதுமை பெண்கள் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுயம் அறக்கட்டளை நிர்வாகி உமா, பாரதி பெயரில் விருது கிடைத்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். உலகிலேயே ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தை நலிவடைந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கொடுத்து வருவதாகவும், அதற்காக இந்த விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இட்லி கடை மேலாளர் கஸ்தூரி, பாரதி கண்ட புதுமை பெண் விருதை தன்னுடன் பணியாற்றும் பெண்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்தார். கடைநிலை ஊழியராக இட்லி கடையில் வேலைக்கு சேர்ந்து தற்போது மேலாளராக உயர்ந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய விலங்குநல ஆர்வலர் பிரியா ராம்குமார், தெரு நாய்க்களுக்கு உணவளித்து அவற்றை பராமரித்து வருவதால் தமக்கு விருது கிடைத்ததாகத் தெரிவித்தார். மேலும், இருப்பிடங்களை தூய்மை வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
















