மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.
இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
பின்னர், பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். இந்நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகப் போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















