அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வங்க தேச பொதுதேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான வன்முறைகள், போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் படுகொலைக்குப் பிறகு இந்தப்போராட்டங்கள் மேலும் தீவிரமாகியுள்ளன. யார் இந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாடி சமூகப் போராட்டங்களைத் தூண்டும் திறமை கொண்டவர் என்று அறியபடுபவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மாணவர் போராட்டங்களின் மூலம் பிரபலமான ஹாடி, பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட புரட்சிகர தளம் என்று பொருள்படும் இன்கிலாப் மஞ்சா அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் தலைமையிலான எழுச்சிப் போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற ஹாடி, இந்திய மேலாதிக்கம் என்று இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை வெளிப்படையாகவே பேசி வங்க தேச இறையாண்மையின் பாதுகாவலராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இறப்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு, தனது முகநூலில்,“Greater Bangladesh” என்று இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வங்கதேசத்தின் புதிய வரைபடத்தைப் பகிர்ந்திருந்தார்.
பிரிட்டிஷ் வங்காளத்தின் கடைசிப் பிரதமரான ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்த்தியின் “ஐக்கிய வங்காளம்” என்ற 1947 ஆம் ஆண்டு தோல்வியுற்ற ஒரு திட்டமே “Greater Bangladesh” என்பதாகும். வங்கதேசத்தில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்காத இந்த “Greater Bangladesh” திட்டம், தீவிர இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் கைகளில் மட்டுமே உள்ளது.
அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் ஹாடி வங்கதேச மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து வந்தார். இந்நிலையில் தான், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகள் முழு போராட்டத்தையும் வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராக மாற்றியது. அதனால்தான் ஷேக் ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முஜிபுர் ரஹ்மான் சிலை மற்றும் அவரது இல்லம் உட்பட விடுதலை போரின் வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன.
அந்தச் சூழலில், “Greater Bangladesh” திட்டத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ஹாடி, கடந்த ஏப்ரலில் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய வரைபடத்தைக் காட்சிப்படுத்தி இருந்தார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் மீது அரசியலமைப்பு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜூலை போராட்டத்தில் நடந்த மரணங்களுக்கு ஷேக் ஹசீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரம் செய்த ஹாடி, நடக்கவிருக்கும் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவும் களத்தில் இறங்கி இருந்தார்.
ஹாடி இந்தியாவுக்கு எதிராகவே பேசுகிறார். எழுதுகிறார். மற்றும் செயல்படுகிறார் என்பதை அவரது குடும்பத்தினரே பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், ரிக்ஷாவில் சென்ற ஹாடியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இடது காதுக்கு மேலே நுழைந்து வலது பக்கமாக வெளியேறிய துப்பாக்கிக் குண்டால் ஹாடியின் தலையின் மூளைத் தண்டு கடுமையாகச் சிதைந்தது. டாக்காவில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிங்கப்பூருக்குத் தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஹாடி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தனது மனைவியையும் பத்து மாதக் குழந்தையையும் விட்டுவிட்டு மரணமடைந்தார்.
ஹாடியின் ,மரணச் செய்தியை அடுத்து, தலைநகர் டாக்கா தொடங்கி வங்கதேசம் முழுவதும் வன்முறைகளும் போராட்டங்களும் அதிகரித்துள்ளன. இன்குலாப் மஞ்சா, ஜூலை புரட்சிகர கூட்டணி மற்றும் வங்காளதேச தனியார் பல்கலைக்கழக மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவின் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் முற்றுகையிடப் பட்டதால்,பாதுகாப்புப்படையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி போராட்டக்காரர்களை அப்புறப் படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றங்சாட்டி முன்னணி பத்திரிக்கை அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. ஹாடியின் உடல் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசால் தடைசெய்யப்பட்ட அவாமி லீக்கின் மாணவர் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படும் ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அக்கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஆலம் கீர் ஷேக் ஆகிய இருவரும் ஹாடியைத் திட்டமிட்டு கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை செய்த சில மணி நேரங்களுக்குள் குற்றவாளிகள் இருவரும் ஐந்து முறை வாகனங்களை மாற்றியும், தங்கள் மொபைல் போன்களை அப்புறப்படுத்தியும் ஆதாரங்களையெல்லாம் அழித்துவிட்டு, மைமன்சிங்கில் உள்ள ஹலுவாகாட் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் தூதருக்கு சம்மன் அனுப்பிய வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் ஹாடியின் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளது.
வங்க தேசத்தின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா, டெல்லியிலுள்ள வங்கதேச தூதரை அழைத்து, கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி, இப்போது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற பயங்கரவாத இஸ்லாமியக் கட்சிகளுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை முகமது யூனுஸ் அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே வங்கதேசத்தில் இஸ்லாமியக் கட்சிகளுக்கு ஒருபோதும் ஐந்து சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைத்ததில்லை. அனைத்து முற்போக்கு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்குத் தடை விதித்து, ஒரு முறைகேடான தேர்தலை நடத்தி, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முகமது யூனுஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
“அல்லாஹு அக்பர்” “டெல்லியா டாக்காவா” மற்றும் “டாக்கா டாக்காதான்” என்று முழக்கங்கள் வங்கதேச காற்றில் எதிரொலிக்கின்றன. இன்கிலாப் மஞ்சாவின் முகநூல் பக்கத்திலும் , இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அல்லா மாபெரும் புரட்சியாளர் உஸ்மான் ஹாடியை அல்லா ஒரு தியாகியாக ஏற்றுக்கொண்டான் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்திய வங்கதேச உறவு மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது.
















