ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயில், நவதிருப்பதி கோயில்களில் 9வது ஸ்தலமாக விளங்குகிறது. சுவாமி நம்மாழ்வாா் அவதாரத் திருத்தலமான ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயிலில் பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் கொண்டாடப்படும் திரு அத்யயன உற்சவம் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
முதல் நாள் உற்சவத்தில் ஸ்ரீஉடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்ததேசிகர் என ஆச்சாா்யா்களுடன் யானை முன்னே செல்ல மேளதாளங்களுடன் சன்னதியில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















