கடற்கரைக்கு வரும் மக்கள் சுதந்திரமாக, அமைதியாகக் கடல் அழகை ரசிக்க முடியுமா எனச் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் மெரினாவில் ஆய்வு மேற்கொண்டனர்.
நீதிபதிகளுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது எத்தனை அடி இடைவெளியில் கடைகள் இருக்கும், கடற்கரைக்கு வரும் மக்கள் சுதந்திரமாகக் கடல் அழகை ரசிக்க முடியுமா என மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினர்.
மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற வேண்டும் என்றும், நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், சான்றிதழ் பெற மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் எனக் கடற்கரையிலேயே அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
















