தமிழகத்தில் உள்ள அனல் மற்றும் நீர் மின் நிலையங்களில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடசென்னை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், எண்ணூர் விரிவாக்கம் ஆகிய பெயர்களில் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலும், ராமநாதபுரம் உப்பூரிலும் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் குந்தா நீரேற்று மின் நிலையம், நாமக்கல் கொல்லிமலையில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனல் மற்றும் நீர் மின்நிலையங்களின் கட்டுமான பணிகள் 2020 – 21ஆம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை எந்த மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனல் மற்றும் நீர் மின் திட்டங்களின் நிலை குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகவும், மின் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிந்து 2026 மார்ச்சுக்குள் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















