பஞ்சாபில் ஆன்லைனில் 8 கோடியே 10 லட்சம் ரூபாயை இழந்ததால் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அமர் சிங் சாஹல் என்பவர், ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட போலி நிதி நிறுவனத்தில் தொடர்ந்து பணம் முதலீடு செய்துள்ள நிலையில், வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அமர் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது அறையில் இருந்து 16 பக்கங்கள் அடங்கிய தற்கொலை குறிப்பு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், வாட்ஸாப் வாயிலாகத் துவங்கப்பட்ட நிதி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்ததாகவும், சிறுக சிறுக 8 கோடியே 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாவும் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி எடுக்க முயன்றபோது, கூடுதல் கட்டணம் செலுத்த சொல்லி நிறுவனத்தினர் அழுத்தம் தந்ததாகவும், முதலீடு பணத்தை எடுக்க முடியாததால் மோசடி என்பதை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தற்கொலைக்கு மோசடி நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
















