நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மாடன்கோவில் தெருவில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள 28 வீடுகளுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், மாடன்கோவில் தெருவில் உள்ள வீடுகளை இடிப்பதற்கான அரசின் அறிவிப்பாணையுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது வீடுகள் இடிக்கப்படாது என்றும், மீதமுள்ள வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாடன்கோவில் தெருவில் அனைத்து வீடுகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















