சிவகங்கையில் மூதாட்டியை ஏமாற்றி ஒன்றரை சவரன் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் குப்புசாமி என்பவர் இருதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சந்தானம் கணவரைக் கவனித்து வந்துள்ளார்.
குப்புசாமி வார்டுக்கு வந்த மர்மநபர், தனது தந்தையும் இருதய நோய் பிரச்னையால் கடைசி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மருந்து வாங்க சென்ற சந்தானத்தை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் மருத்துவமனையின் கழிவறையில் குப்புசாமி வழுக்கி விழுந்து விட்டதாகவும், அதற்கு விலை உயர்ந்த மருந்தை வாங்கிவருமாறு மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்ததோடு சந்தானத்தை ஏமாற்றி ஒன்றரை சவரன் மதிப்புள்ள கம்மல், தாலியை பறித்துச் சென்றுள்ளார்.
பின்னர், மருத்துவமனைக்கு வந்த சந்தானம் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக, மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர்.
















