வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மத நிந்தனை செய்ததால் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள மைமென்சிங் மாவட்டத்தின் பாலுகா பகுதியை சேர்ந்தவர் திபு சந்திரதாஸ். 30 வயதான இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இவர் Pioneer Knit Composite என்ற ஆடை தொழிற்சாலையில், floor manager-ஆக பணியாற்றி வந்தார். அவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகக் கடந்த 18ம் தேதி தகவல் பரவியது. இதனையடுத்து, அவர் பணியாற்றிய தொலைற்சாலைக்கு முன்பு இஸ்லாமியர்கள் பலர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கேட்டை உடைத்து தொழிற்சாலைக்குள் நுழைந்த அவர்கள், திபு சந்திர தாஸ் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், அவரை வெளியே இழுத்து வந்து கொலை செய்தனர். திபு சந்திர தாஸின் படுகொலை குறித்து தொடக்கத்தில் வெளியான தகவல் இதுதான். மத நிந்தனைதான் அவர் கொலை செய்யப்பட்டதற்கான பிரதான காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது போலீசார் நடத்திய விசாரணை இதனைப் பொய்யாக்கியுள்ளது.
அத்துடன் விசாரணை முடிவுகள், வழக்கில் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. Pioneer Knit Composite தொலைற்சாலையில், floor manager-ஆக பணியாற்றி வந்த திபு சந்திர தாஸ், supervisor-ஆக முயற்சி மேற்கொண்டு வந்தார். இதனால், அங்குப் பணியாற்றிய சில ஊழியர்கள் அவருடன் மோதல்போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவர் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன், மதத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. அன்றைய தினம் மாலை 5 மணியளவில் திபு சந்திர தாஸூக்கு எதிராகத் தொழிலாளர்கள் குழு ஒன்று தொழிற்சாலைக்குள்ளேயே போராட்டம் நடத்த தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழிற்சாலைக்கு முன்பு குவிந்துவிட்டனர். வெளியில் உள்ள கும்பலிடம் திபு சந்திர தாஸ் சிக்கினால், அவர் கட்டாயம் கொலை செய்யபடுவார் என்பதை உள்ளே இருந்தவர்கள் அறிந்தே இருந்தனர்.
இருந்த போதிலும், அவரை பாதுகாப்பதை விட்டுவிட்டு, அவர்களாகவே, அவரை வெளியே அழைத்துச் சென்று வன்முறை கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் திபு சந்திர தாஸை மிக கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போதும் அவர்களின் வெறி அடங்கவில்லை. அவரின் உடலை நிர்வாணமாக்கி, மரத்தில் தொங்கவிட்டு மீண்டும் தாக்கியுள்ளனர். பின்னர், உடலைத் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
வன்முறை கும்பல் குறித்து சரியான நேரத்தில் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தால் கூட, இந்த படுகொலையைத் தடுத்திருக்கலாம். ஆனால், தொழிற்சாலை தரப்பு அதையும் செய்யவில்லை. இதுகுறித்து அப்பகுதியின் எஸ்.பி. முகமது ஃபர்ஹாத் ஹூசைன் பின்வருமாறு தெரிவிக்கிறார். “போராட்டம் முன்னரே தொடங்கியிருந்த போதிலும், இரவு 8 மணியளவில்தான் எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக நாங்கள் தொழிற்சாலை நோக்கி விரைந்தோம். ஆனால், வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததால், பயணம் தாமதமானது. ஒருவழியாகச் சம்பவ இடத்திற்கு சென்று சேர்ந்த போது, நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். திபு சந்திர தாஸை வன்முறை கும்பல் கொலை செய்துவிட்டதை பின்னர்தான் அறிந்தோம். உரிய நேரத்தில் எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டிருந்தால், அவரின் உயிரை நாங்கள் காப்பாற்றியிருப்போம்”.
ஆக, போலீசாரின் விசாரணையின் மூலம் தெரிய வருவது இதுதான். திபு சந்திர தாஸூக்கும், தொழிற்சாலையில் இருந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் அவர் மீது மத நிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திபு சந்திர தாஸை தொழிற்சாலையில் இருந்தவர்களே வன்முறையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், உரிய நேரத்தில் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்படவில்லை. திபு சந்திர தாஸை காவல்துறையிடம் ஒப்படைக்காதது, அவரது பாதுகாப்பை உறுதி செய்யாதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொழிற்சாலையின் 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்து இளைஞரின் இந்தப் படுகொலை தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், கொலை சம்பவம் குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















