இமயமலையில் 16,000 அடி உயரத்தில் சீன எல்லையில் சாலை அமைக்கும் திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியிருக்கிறது.
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் முலிங் லா மலைப்பகுதி உள்ளது. இது உத்தராகண்ட் மாநிலத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைக்கும் பழங்கால வர்த்தக மற்றும் பயண பாதையாக இருந்தது.
இமயமலையில், 16,000 அடி உயரத்துக்கு மேல் அமைந்துள்ள மலைப்பாதையான இந்த பகுதியை அடைய, தற்போது சாலை வசதி இல்லை. இந்நிலையில் நீலபானி – முலிங் லா இடையேயான, 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ எனப்படும் எல்லை சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சீன எல்லையில் அசாதாரண சூழல் நிலவும் போது, நம் படைகளை சில மணிநேரங்களில் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும்.
















