வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயில் அறிவித்துள்ள சிறப்பு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயிலில் சிறப்பு கட்டணம் வசூலிப்பது ஏழை, எளிய மக்களை மன வேதனை அடைய செய்யும் என தெரிவித்துள்ளார்.
இறைவனை தரிசிக்க கட்டணம் வசூலிப்பது பக்தர்களின் மனதில் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கோயில் என்பது வியாபாரக் கூடமல்ல, இறைவன் காட்சி பொருளும் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத் துறையா அல்லது வியாபார நிறுவனமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஸ்ரீரங்கம் கோயில் அறிவித்துள்ள சிறப்பு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
















