நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கிய பனிப்பொழிவு தற்போது தீவிரமடைய தொடங்கியுள்ளது.
அரசு தாவரவியல் பூங்காவில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 2.5 டிகிரி செல்ஷியசாக குறைந்துள்ளது. புறநகர் பகுதிகளான காமராஜ சாகர், கிளன் மார்கன், அப்பர் பவானி உள்ளிட்ட நிர்ப்பிடிப்பு பகுதிகளிலும் வெப்பநிலை பன்மடங்கு குறைந்துள்ளது.
உள்ளூர் மக்கள் பனியின் தாக்கத்தினால் முடங்கினாலும், சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை காண ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக மழை பொழிவு காரணமாக பனிப் பொழிவு குறைவாக காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பனிப்பொழிவு கடுமையாக இருப்பதை உணர முடிவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கொடைக்கானலில் நிலவும் கடும் உறை பனியால், மலை முகடுகள் இடையே வெண் பஞ்சுபோல காணப்படும் பனிமூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பாம்பார்புரம், ஏரிச்சாலை ஆகிய பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால், செடி, மரம், புல்வெளிகள் மீது பனி படர்ந்து வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், இயற்கை சூழலை கண்டு களித்தனர்.
மலை முகடுகள் இடையே வெண் பஞ்சுபோல காணப்படும் பனிமூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
















