ஆலஞ்சி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்களை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஆலஞ்சி பகுதியில் உள்ள தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிக்கு ஏராளமானோர் வருகை தந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், இளைஞர்களை துரத்தி சென்று தாக்கினர். சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். மேலும், சில இளைஞர்கள் ஊர் மக்களை தாக்க முயன்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசாரை கண்டதும் இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.
















