பாமக பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும் நிறுவனர் ராமதாஸிடம் இருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காகச் செய்தித்தாளில், பாமக தலைமை நிலையம் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 2015, 2025ஆம் ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் சட்ட அதிகாரமற்றவை என நீதிமன்ற தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அன்புமணிக்கு பாமகவின் பெயர், கொடி சின்னம் பயன்படுத்தும் உரிமை இல்லை என்பது சட்டபூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாமகவின் பெயரைப் பயன்படுத்தி கட்சியை தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தனி நபர்கள் அல்லது வேறு எந்த அமைப்பும் அன்புமணியுடன் பாமக எனும் பெயரில் தேர்தல் நடவடிக்கை மேற்கொண்டால் அது சட்டப்படி குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
















