வங்கதேசத்தில் மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாகரம் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச ஆளுங்கட்சி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
ஊழல், இடஒதுக்கீடு, அரசியல் கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கடந்த 2024ம் ஆண்டு நடந்த இளைஞர்களின் எழுச்சி போராட்டம் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்தது. நிலைமை சீராக, சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அடுத்த ஆண்டு வங்கதேசம் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக 2024ம் ஆண்டு நடந்த போராட்டத்தை வழிநடத்திய மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி, தேர்தலில் கால் பதிக்கவிருந்தார்.
இந்தச் சூழலில் கடந்த 12ம் தேதி டாக்காவில் மர்மநபர்களால் சுடப்பட்ட அவர், சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம், வங்கதேசத்தில் மிகப்பெரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை, கொள்கைகளை கொண்ட உஸ்மான் ஹாடி கொலையில் புது டெல்லிக்கு தொடர்பு இருப்பதாக, அரசியல்வாதிகள் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட, அது கலவரத் தீயை பூதாகரமாக்கியது… அந்த வன்முறை தீயில் இந்து இளைஞர் ஒருவர் எரித்துக்கொல்லப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, அண்மையில் மற்றொரு மாணவர் தலைவரான மொதாலேப் ஷிக்தெர் என்பவரும் மர்மநபர்களால் சுடப்பட்டார். இந்தச் சம்பவங்கள் இந்தியாவுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டிருந்த நிலையில், உஸ்மான் ஹாடியின் சகோதரர் ஒமர் ஹாதி, முகமது யூனுஸ் அரசுக்கு எதிராகப் பரபரப்பை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வங்கதேச தேர்தலைச் சீர்குலைக்கும் விதமாகவும், உஸ்மான் ஹாதியின் வளர்ச்சியைச் சரிக்கவும், இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசுதான் இந்த கொலையைச் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்… ஹாதியின் கொலைக்கு நீதி கிடைக்காவிட்டால், நீங்களும் ஒருநாள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
அவரது பேச்சு, இதுவரை இந்தியாவுக்கு எதிராக இருந்த போராட்டத்தை, முகமது யூனுஸ் அரசுக்கு எதிராகத் திருப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்தோ அல்லது வெளிநாட்டு நபர்களிடமிருந்தோ வரவில்லை, மாறாக, வங்கதேசத்திற்குள் இருந்துதான் வந்துள்ளது. வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, வன்முறை, சிறுபான்மை மக்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை உணர்வு போன்றவற்றிற்கு இந்தியா மீது பழிபோட்ட முகமது யூனுஸ் அரசுக்கு, தற்போதைய நிலை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்திய நிகழ்வுகள் வங்கதேச அரசின் கையாலாகாத்தனம், நிர்வாகத் தோல்விகளையே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உஸ்மான் ஹாடி கொலை தொடங்கி இந்துகளுக்கு எதிரான வன்முறைகள் வரை, வங்கதேச அரசின் நிர்வாகத்திற்குள்ளேயே பல்வேறு தவறுகள், குளறுபடிகள் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் பல சந்தர்ப்பங்களில், காவல்துறையின் நடவடிக்கை மெதுவாகவோ அல்லது பயனற்றதாகவோ இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. வகுப்புவாத வன்முறை பொறுத்துக்கொள்ளப்படாது என்பதற்கான வலுவான சமிக்ஞையை இடைக்கால அரசாங்கம் அனுப்பத் தவறிவிட்டது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
வங்கதேசத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை, அகதிகள் ஓட்டம், எல்லை சவால்கள் ராஜதந்திர சிக்கல்கள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு நன்மைகளை விட ஆபத்துகளை உருவாக்குகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து வங்கதேசத்தில் பொது விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் காணப்படுகிறது.அவரது பதவிக்காலம் அதிகாரத்தை மையப்படுத்தியிருந்ததாக விமர்சிக்கப்பட்டாலும், சமீபத்திய நிகழ்வுகள் மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளன. அவரது ஆட்சியின் கீழ், வகுப்புவாத வன்முறை குறைவாகவே இருந்தது, ஜனநாயக பின்னடைவு பற்றிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், சட்டம் மற்றும் ஒழுங்கின் மீது அரசு வலுவான கட்டுப்பாட்டைப் பராமரித்தது பாகிஸ்தானுடன் யூனுஸ் நிர்வாகம் காட்டும் அதீத ஈடுபாடும், நெருக்கமான கூட்டணியும், வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை சிக்கலாக்கும் என்றும், பரந்த புவிசார் அரசியல் பதட்டங்களுக்குள் இழுக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவைக் குறை கூறுவது குறுகிய கால அரசியலுக்கு உதவுமே தவிர, நாடு எதிர்கொள்ளும் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்க சிறிதும் உதவாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். வங்கதேசம் இந்தக் கடினமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அதன் இடைக்காலத் தலைமையின் செயல்திறன் இறுதியில் யாரைக் குறை கூறுகிறது என்பதைப் பொறுத்து அல்ல, மாறாக அது ஒழுங்கை மீட்டெடுக்க முடியுமா, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாக்க முடியுமா மற்றும் அரசின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்று கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
















