தமிழக அரசைக் கண்டித்து பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க தலைவர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசாணையை வெளியிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை ஒழித்துக்கட்ட அரசு முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்த பரிசோதனை நிலையத்தின் இடவசதி குறித்து மத்திய அரசு எந்தவித கட்டுப்பாடும் அறிவிக்காத நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்குக் குறைந்தபட்ச இடவசதி நகர்ப்புறத்தில் 150 சதுர அடியும், கிராமப்புறத்தில் 100 சதுர அடி எனவும் நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்களின் இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாகக் காளிதாசன் தெரிவித்துள்ளார்.
















