ஆண்களின் தலைமுடிவு உதிர்வை தடுப்பதற்கான மருந்து, 3ம் கட்ட சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஆண்களுக்குப் பல பிரச்னைகள் இருந்தாலும், அதில் தலையாயது தலைமுடி பிரச்னைதான். இளம்வயதிலேயே முடிஉதிர்வதால் பலருக்கு வயதான தோற்றம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பெண் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகிறது. பல சமயங்களில் முடிஉதிர்தல் தாழ்வு மனப்பான்மைக்கும் வித்திடுகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த முடிஉதிர்வு பிரச்னையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்குத் தீர்வு காண உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இருந்தபோதும், எந்த நிறுவனமும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான பரிசோதனை முடிவை எட்டியதில்லை. இந்தச் சூழலில்தான், அயர்லாந்தை சேர்ந்த காஸ்மோ பார்மசூடிகல்ஸ் என்ற நிறுவனம் முடிஉதிர்தலை தடுப்பது குறித்த ஆய்வில் களமிறங்கியது.
இதற்காக, தலைமுடி இல்லாத 1,500 ஆண்களை தேர்ந்தெடுத்த அந்நிறுவனம், அவர்களுக்கு Blacebo, Clascoterone என்ற 2 மருந்துகளை வழங்கி ஆய்வு மேற்கொண்டது. இதில், Clascoterone மருந்து நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிப்பெற்றிருந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட 3ம் கட்ட சோதனையும் எதிர்பார்த்த நல்ல முடிவை கொடுத்துள்ளது. இதனால் காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர தொடங்கியுள்ளது. பல தசாப்தங்களாகவே, தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சை உலகளவில் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் இதற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் மருந்து விற்பனைக்கு வரும்பட்சத்தில், அது வர்த்தக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்த முதலீட்டாளர்கள் தற்போது முதலே, அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், அதன் பங்கு மதிப்பு தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காஸ்மோ நிறுவனம், தலைமுடி உதிர்வு தடுப்பு மருந்தின் 12 மாதகால பாதுகாப்பை உறுதிபடுத்துவதுதான் தங்களின் அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளது. அதிலும் வெற்றிப்பெற்றுவிட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒப்புதலை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது.
இதனிடையே, மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பிற பெரிய நிறுவனங்களின் பங்களிப்பை பெறவும், காஸ்மோ பார்மசூடிகல்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. அதற்கான தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
Clascoterone மருந்து முழு வெற்றிப்பெற வேண்டும் என்பதில், அதன் தயாரிப்பு நிறுவனத்தை விட, உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். தலைமுடி உதிர்வை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதுதான் மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பாக இருக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















