வங்கதேசத்தில் ஒரு வாரத்தில் இரண்டாவது இந்து இளைஞர், இஸ்லாமிய வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் என்னதான் நடக்கிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டதில் இருந்தே வங்கதேசம் திசையின்றி திண்டாடிக் கொண்டிருக்கிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலும், பொதுவாக்கெடுப்பும் நடைபெற உள்ள நிலையில் மாணவர் தலைவர் ஹாடியின் மரணம், இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டியுள்ளது.
இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்த 25 வயதான திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞரை அடித்தே கொன்ற இஸ்லாமிய வன்முறையாளர்கள், தாஸின் உடலை மரத்தில் தொங்கவிட்டு, தீவைத்து கொளுத்தி கொடூரக் கொலையை வீடியோவும் எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். தாஸின் படுகொலை, இந்துக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, வங்கதேச விசா சேவைகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தது. இநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள், ராஜ்பரி மாவட்டத்தில், 29 வயதான அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞர் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். ஷேக் ஹசீனா பதவி நீக்கப்பட்டநேரத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாகவும், ஓராண்டுக்குப் பிறகு சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய அம்ரித் மொண்டல் உள்ளூர் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்ததாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
சம்பவத்தன்று, தனது ஆட்களுடன் பணம் பறிப்பதற்காக ஷாஹிதுல் இஸ்லாம் என்பவர் வீட்டுக்கு அம்ரித் மொண்டல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த இஸ்லாமின் குடும்பத்தினர் மற்ற கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், கிராம மக்கள் ஒன்று கூடி, அம்ரித் மொண்டலையும் அவருடன் வந்தவர்களையும் சுற்றிவளைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அம்ரித் மொண்டல் பரிதாபமாகக் கொலைச் செய்யப் பட்டுள்ளார். சாம்ராட்டின் கொலை ஒரு “மதரீதியான தாக்குதல்” அல்ல என்று கூறியுள்ள முகமது யூனுஸ் அரசு, அம்ரித் மொண்டல் மீது ஏற்கெனவே கொலை உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது கிறிஸ்துமஸ் செய்தியில் முகமது யூனுஸ் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள், சொல்லில் அடங்காத துயரங்களுக்கு ஆளாக்கி வருவதாகவும், இந்துக்களை எரிப்பது போன்ற அட்டூழியங்களும் நடப்பதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சமூக நல்லிணக்கத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய வங்கதேசம், யூனுஸ் ஆட்சியில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஷேக் ஹசீனா, வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தேச தந்தையின் கனவாக இருந்ததாகவும் அந்தக் கனவை அடையவே அவாமி லீக் ஆட்சி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 20ம் தேதிவரையில் ஒன்பது இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான 69 தாக்குதல்கள் நடந்ததாகவும், இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 2,000க்கும் மேல் நடந்துள்ளன என்று பங்களாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இஸ்கானுடன் தொடர்புடைய இந்து துறவி சின்மாய் கிருஷ்ணா தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். சிட்டகாங் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில், அவருக்கு ஆதரவளித்த இஸ்லாமிய வழக்கறிஞர் சைஃபுல் இஸ்லாம் அலிஃப் கொல்லப்பட்டார்.
2024ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் கடந்த ஜனவரி 25ம் தேதிவரையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான 76 வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப் பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு வங்கதேசத்தில் முக்கிய இந்து தலைவரான ஸ்ரீபபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப் பட்டார். 150க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
















