இந்தியா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், அதிக வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் என, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அண்மையில் இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்தன.
இருநாட்டு பிரதமர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகக்கூறி நியூசிலாந்தில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது முதல் பதவிக் காலத்தில் இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று கூறியதாகவும், அதனை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் 140 கோடி இந்திய நுகர்வோருக்கான கதவைத் திறப்பதன் மூலம், அதிக வேலைவாய்ப்பு, அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதியை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
















