பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நகை மற்றும் பணம் முறைகேடு வழக்கில், முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறங்காவலர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் பற்றி விசாரணை நடத்த வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, கோயில் அறங்காவலர்களிடம் சிவஞானம் விசாரணை நடத்தலாம் என கூறினார்.
மேலும், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை ஜனவரி 30ஆம் தேதிக்குள் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
















