அடித்தட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி எனத் திமுகவை பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பணி நிரந்தரம் வழங்கக் கோரி போராடிய தூய்மை பணியாளர்களையும், சமவேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களையும் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உரிமை கேட்டுப் போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது திமுக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுவதாக விமர்சித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திறனும், துணிச்சலும் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், அடித்தட்டு மக்களிடம் தமது வீரத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள அன்புமணி, ஊழல்வாதிகளை உலவ விட்டு, அடித்தட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி, மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி எனப் பதிவிட்டுள்ளார்.
















