வைகை அணையில் இருந்து பெரியார் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை மாவட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் 54.99 அடியாக உள்ளது.
வைகை அணையில் இருந்து பெரியார் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததால், வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பெரியார் கால்வாய் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியார் கால்வாயில் குளிக்கவோ, துணி துவைக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















